IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். ஏற்கனவே முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 53–வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஐதராபாத் அணி ஆடியது.

ஐதராபாத் அணி வீரர் யுவராஜ்சிங்குக்கு கைவிரலில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பெற்றார். குஜராத் அணியில் பாசில் தம்பி, தவால் குல்கர்னி நீக்கப்பட்டு பிரவீன்குமார், முனாப் பட்டேல் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித், இஷான் கி‌ஷன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

5.2 ஓவர்களில் குஜராத் அணி 50 ரன்னை எட்டியது. அதிரடியாக ஆடிய இஷான் கி‌ஷன் 27 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். ஐ.பி.எல். போட்டியில் அவர் கண்ட முதல் அரைசதம் இதுவாகும். 9.3 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 10.5 ஓவர்களில் 111 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. அரை சதத்தை எட்டிய வெய்ன் சுமித் (54 ரன்கள், 33 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன்) அந்த ஓவரிலேயே ரஷித் கான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதனை அடுத்து கேப்டன் சுரேஷ் ரெய்னா, இஷான் கி‌ஷனுடன் இணைந்தார். அபாரமாக ஆடிய இஷான் கி‌ஷன் (61 ரன்கள், 40 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன்) முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அத்துடன் ஆட்டத்தின் போக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. தொடக்க ஜோடி அமைத்து கொடுத்த நல்ல அடித்தளத்தை பின்னர் வந்த வீரர்கள் யாரும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அந்த ஓவரிலேயே சுரேஷ்ரெய்னா (2 ரன்) ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும், ஆரோன் பிஞ்ச் 2 ரன்னிலும் ரஷித் கான் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

அடுத்து வந்த வீரர்களான பவுல்க்னெர் (8 ரன்), பிரதீப் சங்வான் (0), அங்கித் சோனி (0), பிரவீன்குமார் (1 ரன்), முனாப்பட்டேல் (0) ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்கள். 19.2 ஓவர்களில் குஜராத் அணி 154 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. ரவீந்திர ஜடேஜா 20 ரன்னுடன் (14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், ரஷித்கான் 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டும், சித்தார்த் கவுல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 18 ரன்னிலும் (11 பந்துகளில் 4 பவுண்டரியுடன்), அடுத்து களம் கண்ட ஹென்ரிக்ஸ் 4 ரன்னிலும் (2 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

3–வது விக்கெட்டுக்கு தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 18.1 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் டேவிட் வார்னர் 52 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 69 ரன்னும், விஜய் சங்கர் 44 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். குஜராத் அணி தரப்பில் பிரவீன்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

14–வது (கடைசி) லீக் ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 17 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட குஜராத் அணி சந்தித்த 10–வது தோல்வி இதுவாகும்.






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்